அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய வேண்டும்
- கலெக்டர் வேண்டுகோள்
- புதிய ரேசன் கடை திறப்பு விழா நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி, ரேஷன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கி பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை நான் தீர்ப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலுவை அணுகுவேன். அவர் எல்லா பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதால் தான் நீங்கள் கேட்கிற கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. அந்த வகையில் தான் இந்த ரேஷன் கடையும் திறக்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் என்பது குறைவாக உள்ளது. எனவே அதிக அளவில் நெல் தேவைப்படுவதால் விவசாயிகள் இன்னும் எந்தெந்த இடங்களில் வேண்டும் என்று கேட்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
எனவே விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் நெல்லை விற்பனை செய்யாமல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்கள் உற்பத்தி நெல்லை விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் முருகேஷ் பேசினார்.
முன்னதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.