கொடைக்கானலில் கருவாடுடன் கடத்திவரப்பட்ட புகையிலை பறிமுதல்
- கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது.
- மேலும் 18 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர்ப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி லாரன்ஸ் அண்ணாசாலை, நாயுடுபுரம், கலையரங்கம் பகுதி, ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆனந்தகிரி 2-வது தெருப் பகுதியில் ஹசன் என்பவர் நீண்ட நாட்களாக கருவாடு விற்பதுபோல் கருவாடு பார்சலோடு புகையிலை பாக்கெட்டுகளையும் மறைத்து வாங்கி வந்து விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புகையிலை சுமார் 18 கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லாரன்ஸ் போலீசாருடன் சென்று அவற்றை பறிமுதல் செய்தார்.
விற்பனையில் ஈடுபட முயன்ற ஹசன் என்பவருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலைப்பாக்கெட்டுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விற்பனையில் ஈடுபட முயன்ற நபர் மீது நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.