ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
- பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.
ராமேசுவரம்:
உலகம் முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை முதல் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர். தொடர்ந்து கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்வதற்காக கோவிலின் முதல் பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர்.
அதுபோல் அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரை பகுதி இரண்டு கடல் சேரும் இடமான தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சாலை பகுதியிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அரிச்சல் முனை கம்பிப்பாடு இடைப்பட்ட பகுதியில் சாலையின் இரு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஆகவும் இருந்தது.