உள்ளூர் செய்திகள் (District)

மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலகம் தொடர்ந்து செயல்பட அனுமதி நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மணப்பாறை எல்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2022-09-30 09:26 GMT   |   Update On 2022-09-30 09:26 GMT
  • திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது.
  • தற்பொழுது மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலகம் நீக்கப்பட்டு. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலமாக திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 71 அரசுப் பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. தற்பொழுது மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலகம் நீக்கப்பட்டு. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலமாக திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கலை, இலக்கிய போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்கள் திருச்சி வரை செல்ல வேண்டி உள்ளது. ஆசிரியர், தேர்வுத்தாள் திருத்துவதற்காக திருச்சி வரை சென்று வர வேண்டியுள்ளது. ஆசிரியர் கூட்டங்கள், பயிற்சிகள் தற்போது மணப்பாறையில் நடந்து வருகிறது.

பிற்காலத்தில் இப்பயிற்சிகள் திருச்சியில் நடைபெற்றால் ஆசிரியர்கள் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து 95 கிலோமீட்டர் வரை வர வேண்டி இருக்கும். நலத்திட்டங்கள் (பாடநூல், பாட குறிப்பேடு) தற்பொழுது மணப்பாறையில் பெற்றுக் கொண்ட நிலையில் இனி திருச்சியில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் இனி திருச்சி வரை சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். மாணவர்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தை அணுகி குறைபாடுகளை களைய மணப்பாறையில் அலுவலகம் இருப்பின் ஏதுவாக இருக்கும். மாவட்டக் கல்வி அலுவலகம் சுமார் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்டு, திறக்கப்படாத சூழலில், மணப்பாறை கல்வி அலுவலகம் நீக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலகம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க ஆவண செய்ய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News