உள்ளூர் செய்திகள்

பிராட்டியூர் குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்

Published On 2023-03-15 08:43 GMT   |   Update On 2023-03-15 08:43 GMT
  • பேவர் பிளாக் கற்கள் பதித்து பாதுகாப்பான பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்படும்
  • பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி,

திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி என அனைத்து தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு வழங்கியிருக்கும் திட்டங்களை இன்று தொடங்கி வைக்க இருக்கின்றோம். 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதனை கலெக்டர் முயற்சியால் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் நடப்பதற்கு வசதியாக பேவர் பிளாக் பதித்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது.மணிகண்டம் சேதுராப்பட்டி ஊராட்சியில் ரூ.124 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட இருக்கின்றோம். மொத்தம் 22 நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் பட்டா வழங்க இருக்கின்றோம்இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் நெல்லை மேயரை மாற்ற கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளார்களே என கேட்டதற்கு, ஒவ்வொரு இடத்திலும் சிறு, சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதனை பேசித்தான் தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு தானே ஆக வேண்டும். அவர் தி.மு.க. மேயர் அல்லவா என பதில் அளித்தார்.

Tags:    

Similar News