- மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது
திருச்சி,
மின்துறை தொடர்ந்து பொதுத்துறையாக நீடிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி பெருநகர வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி தென்னூர் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலதுணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் சிவ செல்வன், தலைவர் சத்யநாராயணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் நடராஜன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பழனியாண்டி, டி.என்.பி.இ.ஓ. மாநில துணை செயலாளர் இருதயராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர்கள், கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.