உள்ளூர் செய்திகள்

பொன்மலை ஜி.கார்னரில் பாம்பே சர்க்கஸ் தொடக்கம் - மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார்

Published On 2022-07-20 10:15 GMT   |   Update On 2022-07-20 10:15 GMT
  • திருச்சி பொன்மலை ஜி. கார்னர் பகுதியில் கிரேட் பாம்பே சர்க்கஸ் திறப்பு விழா நடைபெற்றது.
  • அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய இளம் பெண்ணின் சாகச நிகழ்வு மெய் சிலிர்க்க வைக்கிறது

திருச்சி :

திருச்சி பொன்மலை ஜி. கார்னர் பகுதியில் கிரேட் பாம்பே சர்க்கஸ் திறப்பு விழா நடைபெற்றது. இந்த சர்க்கஸ் நிகழ்வினை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கிராப்பட்டி பகுதி தி.மு.க. செயலாளர் மோகன்தாஸ், பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றனர்.

சர்க்கஸில் இடம் பெற்றிருந்த ரிங் டான்ஸ் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதேபோன்று அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய இளம் பெண்ணின் சாகச நிகழ்வு மெய் சிலிர்க்க வைக்கிறது.

இதுபற்றி சர்க்கஸ் மேலாளர் உண்ணி கூறும்போது, 1920 களில் மகாராஷ்டிராவில் பாம்பே சர்க்கஸ் தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் மக்களிடம் நல்ல வரவேற்புடன் சர்க்கஸ் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மூன்று நேரம் சர்க்கஸ் நடத்தப்படுகிறது.

ஒரு ஷோ 2 ¼ மணி நேரம் நடைபெறும். இதில் 85 கலைஞர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுழற்சி முறையில் பாம்பே சர்க்கஸ் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் மாபெரும் தலைவர்கள் அனைவரும் பாம்பே சர்க்கஸ் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் கலைஞர்களை வாழ வைக்கும். பொன்மலை ஜி கார்னர் பகுதியில் ஒரு மாதம் முழுவதும் சர்க்கஸ் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

Tags:    

Similar News