மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை
திருச்சி,
திருச்சி மாநகரில் பள்ளி,கல்லூரி பகுதிகளில் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பீமநகர் நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஹவுஸ் அருகில் சிலர் போதை மாத்திரை மற்றும் ஊசி விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் சம்பல இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு மூன்று சிறுவர்கள் கையில் போதை ஊசி மற்றும் மாத்திரை வைத்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து சிறுவர்கள் மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது மூன்று சிறுவர்களும் போதை மாத்திரை மற்றும் ஊசியை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விற்க முயற்சி செய்தது தெரிய வந்தது.இது குறித்து திருச்சி கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் குமார் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த சச்சின், சதீஷ், சாம்ராஜ் ஆகிய மூன்று சிறுவர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மூன்று சிறுவர்களிடம் போதை மாத்திரை மற்றும் ஊசியை கொடுத்தது யார்,யாரிடம் வாங்கினார்கள்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.