உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி நார்மில் சாலை ஓரம், கேட்டுக்காரர் தோட்டத்திலுள்ள தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி கிணறுகள்.

வாழப்பாடியில் தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி கிணறுகள்

Published On 2022-10-19 09:21 GMT   |   Update On 2022-10-19 09:21 GMT
  • சாலையோரத்தில் நீதிமன்றத்திற்கு அருகிலேயே தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி விவசாய கிணறு உள்ளது.
  • சாலையோரத்தில் காணப்படும் திறந்தவெளி கிணறுகளுக்கு தடுப்புச் சுவர்கள் அமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழப்பாடி:

வாழப்பாடி பேரூராட்சியில் குடியிருப்புகள் அமைந்துள்ள அக்ரஹாரம் பகுதியில் இருந்து கிழக்குக்காடு, கணபதி தெரு பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு சாலையோரத்தில் நீதிமன்றத்திற்கு அருகிலேயே தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி விவசாய கிணறு உள்ளது. இச்சாலையின் முகப்பில் கேட்டுக்காரர் தோட்டத்திலும் தடுப்புச்சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு உள்ளது. இதேபோல் இச்சாலையில் இருந்து கூட்டுறவு பால் கொள்முதல் நிலையம் மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலையிலும் குடியிருப்பு பகுதிக்கு அருகே பாழடைந்த திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது.

இந்த சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறினாலோ, வாகன ஓட்டிகளின் கவனம் குறைந்தாலும், வாகனங்கள் நேராக கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து நேரிடும் அபாய நிலை உள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையோரத்தில் காணப்படும் திறந்தவெளி கிணறுகளுக்கு தடுப்புச் சுவர்கள் அமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News