உள்ளூர் செய்திகள்

உரிகம் அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Published On 2023-08-13 09:22 GMT   |   Update On 2023-08-13 09:22 GMT
  • ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கடந்த பொதுத் தேர்வில் 59 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெற்றனர்.
  • காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பார்கள்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உரிகம் மலைக் கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

இக்கிராம மாணவர்கள் உரிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இக்கிராமப் பகுதியிலிருந்து இயக்கப்படும் ஒரே பேருந்தில் பயணிகளின் நெரிசலுக்கு இடையில் மாணவர்கள் பயணித்து பள்ளிக்கு வருகின்றனர்.

ஆனால், பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை. மேலும், 16 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 8 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால், மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.

இது ஒருபக்கம் இருக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால், விளையாட்டு மைதானத்தில் கரையான் புற்றுகள் வளர்ந்துள்ளன.

பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாததால், பள்ளி வளாகம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை கட்டிடம் இடிந்து பல ஆண்டுகளாகியும் புதிய கழிப்பறை கட்டாததால், திறந்த வெளியை அவசரத்துக்கு மாணவர்கள் பயன்படுத்தும் நிலையுள்ளது.

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறுகையில்:- ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலையுள்ளது.

வெளியூர்களுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைக்கும் அளவுக்கு எங்களிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே, உரிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், போதிய அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் வேண்டும் என கூறினர்.

இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் மலைக் கிராமம் என்பதால் ஆசிரியர்கள் இங்கு பணிக்கு வர தயங்கு கின்றனர்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கடந்த பொதுத் தேர்வில் 59 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெற்றனர்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பார்கள் என கூறினர்.

கிராம பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், இதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும்.

அடிப்படை வசதி மற்றும் பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியுள்ள மலைக் கிராம மாண வர்களுக்கு கல்வி புறக்கணிக்கப்படுவது, நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றத்தைத் தராது என்பதை உணர்ந்து இப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இப்பகுதி கல்வி யாளர்களின் கோரிக்கை யாக உள்ளது.

Tags:    

Similar News