உள்ளூர் செய்திகள்

ஊட்டி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து விபத்து

Published On 2022-06-06 10:00 GMT   |   Update On 2022-06-06 10:43 GMT
  • 7 பேர் படுகாயம் அடைந்தனர்
  • கேரள மாநிலம் வயநாட்டுக்கு சுற்றுலா வந்தனர்

ஊட்டி:

சென்னையைச் சேர்ந்த 15 பேர் ஒரு வேனில் கேரள மாநிலம் வயநாட்டுக்கு சுற்றுலா வந்தனர். அவர்களுடன் வேன் டிரைவர்கள் 2 பேரும் இருந்தனர். அவர்கள் வயநாட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். ஊட்டியை கடந்து அவர்களது வேன் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அதிகாலை 4 மணிக்கு 4-வது கொண்டை ஊசி வளைவில் வந்தது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் நடுரோட்டில் வேன் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவர்கள் வேன் கவிழ்ந்ததும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் 7 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தற்போது சீசன் நேரம் என்பதால் நூற்று க்கணக்கான வாகனங்கள் அந்த வளைவுகளை கடந்து செல்கின்றன.

புதிதாக வரும் வாகன ஓட்டிகள் இவ்வாறு வளைவில் திரும்ப முடியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இதற்காக ஊட்டியின் முக்கிய இடங்களில் போலீசார் நின்று வாகனங்களை மெதுவாக இயக்குமாறு கூறி துண்டுபிரசுரங்கள் வழங்கி வருகிறார்கள். இருந்தாலும் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நடந்து விடுகின்றன. 

Tags:    

Similar News