வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடிய 2 பேர் கைது
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவை அடுத்த கட்டுப்புடி சாரதி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோ கரன் (வயது 65). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், மோகன் ராஜ் (32) என்ற மகனும் உள்ளனர். ஆதிலட்சுமி ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். மோகன் ராஜ் கரடிகுடிபகுதியில் செல் போன் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காலை 8 மணிக்கு 3 பேரும் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்று உள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து மனோகரன் பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி அகரம்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது சந் தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த 2 பேரை பிடித்து வந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் அவர்கள் வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (46), சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (51) என்பதும், மனோகரன் வீட்டில் திருடிய தும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.