போலீஸ்காரர்களை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது
- வேலூர் கோட்டையில் துணிகரம்
- செல்போனை பறிக்க முயற்சி
வேலூர்:
வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று வேலூர் கோட்டை கொத்தளம் பகுதியில் சிலர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முபாரக் (வயது 34) என்பவர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களில் ஒரு வாலிபரிடம் செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வாலிபரை முபாரக் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. உடனே பொதுமக்கள் சத்தம் போடவும் முபாரக் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அவரை கோட்டை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீஸ்காரர் தமிழரசன் பிடிக்க முயன்றார். அப்போது முபாராக் கையில் வைத்திருந்த உடைந்த கண்ணாடி பாட்டிலால் தமிழரசனை குத்தி விட்டு தப்பி ஓடினார். பின்னர் அவர் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அங்குள்ள வாகனங்களை சேதப்படுத்தி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே அவரை போலீஸ்காரர் பாலாஜி தடுக்க முயன்றார். அவரையும் முபாரக் பாட்டிலால் குத்தினார்.
வாலிபர் கைது
அதற்குள் அங்கு வந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீசார் முபாரக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களையும் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து முபாரக்கை அண்ணா சாலையில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அப்போது முபாரக் தப்பி ஓடினார். உடனே முபாரக்கை விரட்டி சென்று போலீசார் பிடித்தனர்.
அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணையில் முபாரக் போதையில் இருந்ததும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.