உள்ளூர் செய்திகள்

இளம் பருவ திருமணத்தால் பெண்கள் ஆயுள் குறையும்

Published On 2022-07-12 09:07 GMT   |   Update On 2022-07-12 09:07 GMT
  • தமிழகத்தில், 28 சதவீதம் குழந்தை தாய்மார்கள், பிரசவகாலத்தில் உயிரை இழக்கின்றனர்.
  • காட்பாடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

வேலூர்:

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளம் பருவ திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்ட மருத்துவர் எம்.கீர்த்தனா பேசியதாவது;-

குழந்தை திருமணத்தால், பலரின் வாழ்க்கை, பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது. தமிழகத்தில், 28 சதவீதம் குழந்தை தாய்மார்கள், பிரசவகாலத்தில் உயிரை இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர். பெண்ணுக்கான திருமண வயது 18, ஆணுக்கான திருமண வயது 21 என்பதை அதிகாரிகள் முழங்கினாலும் அவற்றை காதில் வாங்காமல் கடமை முடிந்தது என நினைக்கும் பெற்றோர் இருக்கத்தான் செய்கின்றனர்.

இளம் வயதில் திருமணங்களால், பெண்ணுக்கு கல்வி தடைபடும், தன்னம்பிக்கை குறையும், அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்து பற்றாக்குறை, இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சியில்லாதது, பிரசவத்தின்போது தாய், சேய் மரணமடையும், எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை பிறக்கும், ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடையும், நோய் மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும். எனவே நாம் அனைவரும் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். முன்னதாக தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். மருந்தாளுனர் எஸ்.தாஸ் முன்னிலை வகித்தார். முடிவில் உடற்கல்வி ஆசிரியை எஸ்.புவனா நன்றி கூறினார்.

Tags:    

Similar News