விபத்தில் மூளை சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
- உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்
- இதயம் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது
வேலூர்:
திருவள்ளுவர் மாவட்டம் ,வீரமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எபிநேஷன் (வயது 48). இவர் திருத்தணி அருகே உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி மருதாலம் கூட்டு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் பின்னால் வந்த மணல் லாரி எபிநேஷன் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட எபிநேஷன் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் எபிநேஷனை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எபிநேஷன் நேற்று மூளை சாவு அடைந்தார்.
அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து எபிநேஷனின் இதயம் நுரையீரல் சென்னை எம் ஜி எம் ஆஸ்பத்திரிக்கும் கல்லீரல், இடது புற சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் வலது புற சிறுநீரகம் சென்னை அப்போலோ ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.
மூளை சாவு அடைந்த எபிநேசனுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பால் ஆபிரகாம், கிரேஸ்சன், கத்ரின் ரோஸ் என 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.