கிரீன் சர்க்கிள் மேம்பாலங்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி தொடக்கம்
- அழகாய் மாறுது வேலூர்
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிளில் மேம்பால சுவர்களில் இருபுறமும் போஸ்டர்கள் ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர்.
இதனால் மேம்பாலச் சுவர்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மாநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த மேம்பாலச் சுவர்களை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கிரீன் சர்க்கிளில் இருபுறமும் உள்ள மேம்பால சுவர்களில் பல வகையான ஓவியங்களை வரையும் பணி இன்று தொடங்கியது.
இதற்காக மேம்பால சுவர்களில் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி அதில் வெள்ளை நிற வண்ணம் தீட்டு பணி இன்று நடந்தது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம் எல் ஏ, மேயர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மாநகர நல அலுவலர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது;
வேலூர் மாநகராட்சி சார்பில் கிரீன் சர்க்கிளில் மேம்பாலத்தின் சுவர்களில் இருபுறமும் வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகிறது. தமிழகம் நம்முடைய மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் உள்ள கோட்டை உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க வரைபடம் அமைய உள்ளது.
மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் அரசு நில திட்டங்கள் போன்றவை பட விளக்கங்களாக இந்த மேம்பாலங்களில் வரையப்படுகிறது.
நெரிசலை குறைக்க கிரீன் சர்க்கிள் இன்னும் சில மாதங்களில் செவ்வக வடிவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் கிரீன் சர்க்கிள் பகுதியில் முழுவதுமாக போக்குவரத்து நெரிசல் குறையும்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் மேம்பால சுவர்களில் வண்ண ஓவியங்கள் மூலம் அழகு படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.