மாநகராட்சி பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
- வேலூரில் ஏழை மாணவர்கள் நலனுக்காக அமைக்கப்படுகிறது
- வரும் கல்வி ஆண்டு முதல் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி யால் 87 பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 60-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 10,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் 15 பள்ளிகளில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. இதுவும் 2017-ம் ஆண்டு ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.
மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்கள் தற்போது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை சார்ந்து உள்ளனர்.
தண்ணீர் தொட்டிகளில் குளோரின் கலக்கப்படுகிறது. ஆனாலும் தொட்டிகளை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது.
பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
வருகின்ற கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து பள்ளிகளிலும் அதிகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ரூ.4.5 லட்சம் செலவில் ஒரு நாளைக்கு 500 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் சுத்திகரிப்பு தொட்டிகள் நிறுவப்பட உள்ளது.
மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் அளவு அதிகரிக்கப்படும்.
சுத்திகரிப்பு எந்திரங்களுக்கு தேவையான தண்ணீர் வசதிக்காக பள்ளிகளில் போர்வெல் அமைக்கப்பட உள்ளது.
வேலூர் மாநகராட்சி பள்ளிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் இந்த பணிகளை விரைவாக செய்ய முடியும். இதன் மூலம் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் என மேயர் சுஜாதா தெரிவித்துள்ளார்.