வேலூர் ஜெயிலில் சிறப்பு எழுத்தறிவு திட்டம்
- வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது
- 9 மத்திய சிறைகளில் செயல்படுத்தப்படுகிறது
வேலூர்:
பள்ளிக்கல்வி துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 'சிறப்பு எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப் பட்டு வருகிறது.
குறிப்பாக முற்றிலும் எழுத, படிக்க தெரியாத கைதிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பள்ளி கல்வித்துறை மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. வேலூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் மற்றும் கடலூர் மாவட்ட சிறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் வரும் 17-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் முறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலகத்தில் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி. குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி. பேரணாம்பட்டு ஆகிய வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.