உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பறிக்கப்பட்டதாக பெண் புகார்
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
- காவி உடையுடன் ஒருவர் தர்ணா
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் பேர்ணாம்பட்டு அருகே உள்ள ராஜாக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது மனைவி பி. ஜெயந்தி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் ராஜாக்கல் ஊராட்சி மன்ற தேர்தலில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். அதே வார்டில் வி. ஜெயந்தி என்பவரும் போட்டியிட்டார். அப்போது நான் தோல்வியடைந்ததாக கவும் வி. ஜெயந்தி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் எனது வாக்கு விபரம் குறித்து விவரம் சேகரித்தேன்.அதில் பி. ஜெயந்தி ஆகிய நான் 119 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும் தற்போது பதவியில் உள்ள வி. ஜெயந்தி 64 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெற்றி பெற்ற என்னை தோல்வி அடைந்ததாக கூறி ஏமாற்றி உள்ளனர். உண்மையான வெற்றி பெற்ற எனக்கு வாடு உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அணைக்கட்டு அருகே உள்ள ஓதியத்தூர் ஊராட்சி தாங்கல், கஜாபுரம், மலை கன்னிகாபுரம், புதுமனை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில் எங்கள் ஊராட்சியை 2 ஆக பிரிக்க வேண்டும். தாங்கல் உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்த்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
பேர்ணாம்பட்டு அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவ சூரிய நிலா என்பவர் காவி உடையுடன் குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதேமில்லத் அரங்கு முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
தனக்கு சொந்தமான வீட்டு மனை நிலத்தை சிலர் அபகரித்து விட்டதாகவும் இது பற்றி புகார் அளித்தால் யாரும் உதவி செய்யவில்லை எனக் கூறி அவர் கோஷம் எழுப்பினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி அவரை சமாதானம் செய்து அவரிடம் இருந்து மனு பெற்றுக்கொண்டார்.இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.