உள்ளூர் செய்திகள்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை

Published On 2022-12-21 06:23 GMT   |   Update On 2022-12-21 06:23 GMT
  • நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
  • இந்த தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 -ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய விவரம், தங்கத்தினை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியினை முடித்தவர்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரணக் கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிலும் வகையில் இந்த பயிற்சியானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரம்) பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டு பெட்டி) இலவசமாக வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு முதல்வர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டபம். எஸ்.ஆர்.நாயுடு நகர், பி.ஆர்.சி. டிப்பே எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 88071 59088 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News