ஆசிரியர்களுக்கு எமிஸ் இணைய தள பயிற்சி
- 8 ஆயிரம் ஆசிரியர்களுக்கு எமிஸ் இணைய தள பயிற்சி அளிக்கப்பட்டது.
- மாணவர்களுக்கான உடல் நல பாதுகாப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் முதல் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை இணையதளம்) குறித்த பயிற்சி 226 மையங்களில் நடந்தது. இதில் 7792 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளி, நகர்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் நடந்த இந்த பயிற்சியை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு, எமிஸ் இணையதளம் மூலம் ஆசிரியர், மாணவர் வருகை பதிவு செய்வது, ஆசிரியர்களின் விடுப்புகளை பதிவேற்றம் செய்வது, தொடர்ந்து எமிஸ் இணைய தளத்தில் வரவிருக்கும் வசதிகள், மாணவர்கள்- ஆசிரியர்களுக்கான மதிப்பீட்டுத் தளம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கான உடல் நல பாதுகாப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தற்போது அரசு, கல்வித் துறையில் பல்வேறு நவீன உயர் தொழில் நுட்ப வசதிகளைப் புகுத்தி வருகிறது. இதனால் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டு மாணவர்கள்- ஆசிரியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல்கள் முழுமையாக எமிஸ் இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு காலவிரையம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளர் முருகுதிருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராஜ், கற்பகம், செல்வம், லிங்கேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.