சொத்துவரி உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம்
- ராஜபாளையத்தில் வருகிற 28, 29-ந் தேதிகளில் சொத்துவரி உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம் நடக்கிறது.
- இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் பஞ்சாலைகள், விவசாயம் ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது.
இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100 கிராமங்களுக்கு ராஜபாளையமே தாய் நகரமாகவும், தினமும் ராஜபாளையம் நகரத்தில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் கிராம மக்கள் வந்து செல்லும் நகராட்சியாகவும் உள்ளது.
இந்த நகராட்சியில் மாநில அளவில் மிகவும் அதிகபட்சமாக சொத்து வரி, குடிநீர்வரி உயர்த்தி இருப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் வைத்து செயலாளர் எம்.சி.வெங்கடேஸ்வரராஜா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பத்மநாதன், செயலாளர் ஆடிட்டர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சுகந்தம் ராமகிருஷ்ணன், ராஜவேல், டைகர் சம்சுதீன், வாசுதேவ ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக் களை தெரிவித்தனர்.
முடிவில் வருகிற 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை காட்ட முடிவு செய்தனர்.