உள்ளூர் செய்திகள்

ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2022-07-24 07:35 GMT   |   Update On 2022-07-24 07:35 GMT
  • ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகர் 2-வது வடக்கு தெருவில் குடியிருந்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கர பாண்டியன், அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதி மணி ஆகிய இருவரையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். மேலும் அடையாளங்களை அழிக்க மிளகாய் பொடியையும் தூவி விட்டு சென்றனர்.

இந்த வழக்கில் மதுரை சரக ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி பொன்னி ஆலோசனையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மனோகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளை பதிவிறக்கம் செய்தும், செல்போன் டவர்களை ஆய்வு செய்து வந்ததில் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், சிலரை அருப்புக்கோட்டையிலும் சிலரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இருந்தும் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சங்கரபாண்டியன் வீட்டில் இருந்த செல்போன் தொலைந்து விட்டதாகவும் அதை தற்போது வரை பயன்படுத்தி வந்த ஒருவரையும், அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் விசாரிக்க இன்று ஐ.ஜி.அஸ்ரா கார்க் அருப்புக்கோட்டை வருகிறார்.  

Tags:    

Similar News