உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள்

Published On 2023-10-24 08:58 GMT   |   Update On 2023-10-24 08:58 GMT
  • சுற்றுலா சென்ற இடத்தில் 5 கல்லூரி மாணவர்கள் பலி
  • குளிக்கவும், செல்பி எடுக்கவும் தடை

வால்பாறை,

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா சென்ற 5 கல்லூரி மாணவர்கள் கடந்த 20-ந் தேதி அன்று ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர்.

எனவே ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப்பகுதிகளல் குளிப்பது, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதை குழந்தைகள், சுற்றுலாபயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருப்பதினால் பல நேரங்களில் நீர்நிலைகளில் அடித்து சென்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு வனத்துறை மற்றும் வால்பாறை நகராட்சி மூலம் வால்பாறை, அதனை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைகளான நீர்வீழ்ச்சி எஸ்டேட் நதி, கருமலை எரச்சை பாறை, கூலங்கல் ஆறு, சோலையார் வளைவு, ஸ்டான்மோர் நதி, கெஜமுடியில் கூடுதோரை, வெள்ளைமலை சுரங்கப்பாதை, கெஜமுடி சுரங்கப்பாதை, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தாளனார் நீர்வீழ்ச்சி, காதம்பரை அணை, மேல் ஆழியாறு அணை, காதம்பரை 501 சுரங்கப்பாதை, சந்தன அணை, சோலையார் அணை முன்பக்க ஆறு, சின்னக்கல்லார், நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டில் புலி பள்ளத்தாக்கு, அனலி நீர்வீழ்ச்சி, மனோம்பள்ளியில் தங்கவேல் ஆறு ஆகிய 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், இந்த ஆற்றுப்பகுதி மிகவும் ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும் மற்றும் சுழல்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவவாறு அவர் கூறி உள்ளார். 

Tags:    

Similar News