கோவை வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் இருப்பு
- யானை மடுவு உள்ளிட்ட 2 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது.
- இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது.
வடவள்ளி,
கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார பகுதியில் மருதமலை , ஓணாப்பாளையம், அட்டுக்கல், வெள்ளருக்கம்பாளையம், நரசீபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் போதிய மழை இன்றி வனப்பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.
வனப்பகுதியில் யானை, மயில், புள்ளி மான்கள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்டவை மேற்கு மலைத்தொடர்ச்சி வனப்பகுதியில் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க ஆங்காங்கே வனப்பகுதியில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டி அவற்றில் சோலார் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளன.
அதிலும் யானைகள் ஒன்று கூடும் இடமான கோவை வனச்சரகத்தில் யானை மடுவு உள்ளிட்ட 2 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. அங்கு வனவிலங்குகள் தாகம் தீர்க்கும் வகையில் எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது தொட்டிகளை பார்வையிட்டு நீர் நிரப்ப ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உப்புக்கட்டிகள் அருகில் வைக்கப்படட்டு உள்ளது.கோவை வனத்துறை கோடைக்காலத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது.