உள்ளூர் செய்திகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டிகளுடன் சுற்றி திரியும் காட்டு யானைகள்

Published On 2022-10-29 08:29 GMT   |   Update On 2022-10-29 08:29 GMT
  • வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
  • 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் சுற்றி திரிவது வழக்கம்.

இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையொட்டிய வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

அவ்வப்போது இந்த யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே சாலைகளில் செல்லும் போதும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையும் அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று, 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன. அப்போது வாகனங்களின் சப்தத்தை கேட்டதாலும், அதிக மக்கள் இருந்ததாலும் யானைகள் ஓட்டம் பிடிக்க துவங்கின.

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு சிலா் அதிக கூச்சலிட்டு யானைகளை புகைப்படம் எடுத்தனா். இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. உப்பட்டியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் அம்ரூஸ்வளைவு அருகே குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. சாலையில் நடந்து சென்றதோடு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

மேலும் அருகே தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் ஊருக்குள் நுழையாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News