உள்ளூர் செய்திகள் (District)

பஸ்சுக்காக சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் காத்திருக்கும் மாணவிகள்.

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-11-03 09:02 GMT   |   Update On 2023-11-03 09:02 GMT
  • பயணிகள் சாலையில் காத்திருப்பதும், மழையில் நனையும் சூழ்நிலையும் உள்ளது.
  • வெயிலுக்கும் ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழணிமாணிக்கம் (தி.மு.க) தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு 7 ஆண்டுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு பேராவூரணி நகர் பகுதியில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, புதுக்கோட்டை சாலையை விரிவு படுத்தினர்.பட்டுக்கோட்டை சாலை மற்றும் அறந்தாங்கி சாலை பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.மேலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பொதுமக்கள் பயணிகள் பயன்பாட்டில் இருந்து வந்த பயணியர் நிழற்குடை அப்புறப்ப டுத்தப்பட்டது.

இதனால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பேருந்துக்காக சாலையில் காத்திருக்கும் போது மழையில் நனையும் நிலை உள்ளது.

கொன்றைக்காடு, காலகம், திருப்பூரணிக்காடு, நாடங்காடு, களத்தூர், ஒட்டங்காடு பகுதி செல்லும் பயணிகள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அரசு மற்றும் தனியார் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், பள்ளி மாணவிகள் மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

மதிய நேரங்களில் உட்கார இடமில்லாமல் பயணிகள் வெயிலில் சாலை ஓரத்தில் அமர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

பயணிகள் இன்னலை போக்க போர்க்கால அடிப்படையில் பயணிகள் நிழற்குடை இருந்த அதே இடத்தில் மீண்டும் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர் துரைராஜன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News