செய்திகள்

அதிமுக தலைமைக் கழகத்தில் வேட்பாளர் நேர்காணல்- மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Published On 2019-03-17 11:07 GMT   |   Update On 2019-03-17 11:07 GMT
அதிமுக தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. #ADMK

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று காலை நடைபெற்றது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து, தொகுதி நிலவரம், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.

யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

18 தொகுதிக்கும் மொத்தம் 311 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று நேர்காணலில் பங்கேற்றனர்.

நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில் யார் வேட்பாளர் என்பதை நேரடியாக தெரிவிக்காமல் கட்சி நிறுத்தும் வேட்பாளரை கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெற செய்யபாடுபட வேண்டும் என்று பொதுவான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தனர்.

நேர்காணல் நிகழ்ச்சி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால் யாரும் சோர்வாகிவிடக் கூடாது. நமக்கு வெற்றிதான் முக்கியம். அதற்கேற்ப பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர். #ADMK

Tags:    

Similar News