செய்திகள் (Tamil News)

நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்- கமல்ஹாசன் பேச்சு

Published On 2019-03-31 12:14 GMT   |   Update On 2019-03-31 12:14 GMT
ஒவ்வொருவரும் 100 மீட்டர் தூரம் நடக்கும்போதும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்ல கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும். அப்போதுதான் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். #kamalhaasan #makkalneedhimaiam

திண்டிவனம்:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி திண்டிவனம் காந்தி சிலை அருகே காலை 9 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களுடன் வேட்பாளரும் அங்கிருந்தார்.

பகல் 11 மணிக்கு கமல் ஹாசன் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். நண்பகல் 12.15 மணிக்கு கமல்ஹாசன் அங்கு வந்து திறந்த வேனில் நின்றபடி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் ஆரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார்.

நல்ல கட்சிக்கு ஓட்டுப் போட்டு, மாற்று சரித்திரத்தை உருவாக்க வேண்டும். எங்கள் கட்சியில் பணப்பட்டுவாடா இருக்காது. மற்ற கட்சியினர் உங்களின் ஏழ்மை- வறுமையை பயன்படுத்தி கொண்டு உங்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்று விடுகிறார்கள்.

மக்களும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஓட்டுகளை போட்டு விட்டு அதன் பின்னர் 5 ஆண்டுகள் முச்சந்தியில் நிற்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை 5 வருடத்துக்கு கணக்கு போட்டு பார்த்தால் 0.01 சதவீதம் கூட இருக்காது. உங்கள் பணத்தையே ஓட்டுக்காக உங்களுக்கு கொடுத்து விட்டு மீதம் உள்ள பணத்தை கட்சிக்காரர்கள் சேமிப்பாக வைத்துக் கொள்கிறார்கள்.

ஒவ்வொருவரும் 100 மீட்டர் தூரம் நடக்கும்போதும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்ல கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும். அப்போதுதான் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் கமல்ஹாசன் புதுவை மாநில வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அங்கிருந்து புறப்பட்டு புதுவை சென்றார். #kamalhaasan #makkalneedhimaiam 

Tags:    

Similar News