செய்திகள்

அ.தி.மு.க. - பா.ஜனதாவும் என்னை தோற்கடிக்க ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம்- திருமாவளவன் குற்றச்சாட்டு

Published On 2019-04-06 10:07 GMT   |   Update On 2019-04-06 10:07 GMT
சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க. - பா.ஜனதாவும் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #bjp #admk

சிதம்பரம்:

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டுகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் பாராளு மன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று பா.ஜனதா வினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

அதற்கு காரணம் நான் பா.ஜனதா, அ.தி.மு.க. மதவாதம் ஆகியவற்றை எதிர்த்து பேசுவதுதான். ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுவதாலும் எதையும் கண்டித்து பேசுவதாலும் ஆத்திரத்தில் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கி உள்ளனர்.

திருச்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரை சோதனையிட்டு அவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த சம்பவத்தை தேர்தலோடும் என்னோடும் முடிச்சு போட்டு வேண்டு மென்றே என் மீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.

அவர் அந்த பணத்தை தொழிலுக்காக எடுத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தை கட்சியிலே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எவரிடமாவது இது வரை சோதனை நடந்துள்ளதா? அவர்கள் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கிறார்களா?

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியினர் தேர்தல் செலவுகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கின்றனர் என வருவாய்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா? எத்தனை களங்கத்தை சுமத்த நினைத்தாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.  #thirumavalavan #bjp #admk

Tags:    

Similar News