செய்திகள்

முகப்பேர்-கும்மிடிப்பூண்டியில் ஏ.டி.எம். பணம் ரூ. 3 கோடி பறிமுதல்

Published On 2019-04-09 07:20 GMT   |   Update On 2019-04-09 07:20 GMT
முகப்பேர்-கும்மிடிப்பூண்டியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஏ.டி.எம். பணம் ரூ. 3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

அம்பத்தூர்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கம் உள்ளிட்டவையை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேற்கு முகப்பேர் பகுதியில் தேர்தல் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வேனில் ரூ. 2 கோடியே 34 லட்சம் ரொக்கம் இருந்தது. அவை ஏ.டி.எம். எந்திரத்துக்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணம் என்று அதில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களிடம் பணத்துக்கான ஆவணம் இல்லை. இதையடுத்து ரூ. 2 கோடியே 34 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வளசரவாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

 


கும்மிடிப்பூண்டியை அடுத்த பொம்மாஜிகுளத்தில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கவரைப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேடு நோக்கிச் சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் மூலம் ரூ. 80 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ. 80 லட்சத்தை பறிமுதல் செய்து கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு ரொக்கப்பணம் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் நேற்று இரவு கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமன், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன், மற்றும் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜ்கமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த மினி வேனை மடக்கி சோதனை நடத்தினர் அதில் ரூ. 65 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது. வேனில் இருந்தவர்களிடம் விசாரித்த போது தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பதும் கடைகளில் வசூல் செய்யப்பட்ட மொத்த பணம் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ரூ. 65 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019

Tags:    

Similar News