செய்திகள்

ராகுல் தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையப்போவது உறுதி- வைகோ பிரசாரம்

Published On 2019-04-09 14:20 GMT   |   Update On 2019-04-09 14:20 GMT
மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையப்போவது உறுதி என்று தேர்தல் பிரசாரத்தில் வைகோ பேசினார். #vaiko #rahulgandhi

ஈரோடு:

ஈரோடு தொகுதிக்குட்பட்ட வெள்ளோட்டில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த பகுதியில் விளை நிலங்களில் உயர் மின் அழுத்த மின் கோபுரம், கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டால் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு பெருநிறுவனங்களின் ஆதரவு அரசாக உள்ளது. விவசாய கடன், கல்வி கடனை தள்ளுபடி செய்ய முடியாது எனச்சொல்லும் மத்திய அரசு, பெரு நிறுவனங்களின் 2.42 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறது. அவர்களுக்கு 5 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்குகிறது. ஜிஎஸ்டி அமலாகத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 80 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்ன பிரதமர் மோடி, 200 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. ரூ.50 ரூபாய் கேபிள் கட்டணம் செலுத்திய மக்கள் இப்போது ரூ.300 செலுத்த வேண்டியுள்ளது. ரூ.450 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1000 மாக உயர்ந்து விட்டது.

எனவே மத்தியில் நடைபெறும் மக்கள்விரோத, தமிழ்நாட்டுக்கு விரோதமான அரசினை அகற்ற வேண்டும். தேர்தலுக்குப் பின், மாநில உரிமைகளை மீட்கும் வகையில், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் இது உறுதி. நீட் தேர்வினால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாழாகிட்டது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுலும் நீட் தேர்வை ரத்து செய்வோம், பறிக்கப்பட்ட கல்வி உரிமை மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் வஞ்சக திட்டங்களை தடுக்க முடியாத அளவுக்கு ஊழல் புதைகுழியில் தமிழக அரசு சிக்கியுள்ளது. தமிழக அரசு பேரம் நடத்தியதால் பல தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டன.

நாங்கள் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்களையும், அவர்கள் உணர்வுகளையும் மதிக்கிறோம். அதே நேரத்தில் சமய நல்லிணக்கத்திற்கு வெடிவைக்க முயற்சிக்கின்றன. புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு வேதனையைத் தருகிறது. மீண்டும் மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமையுமானால், சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படும். கற்பனை செய்ய முடியாத பாசிச ஏதேச்சதிகார ஆட்சி அமைந்து விடும்.

இவ்வாறு வைகோ பேசினார். #vaiko #rahulgandhi

Tags:    

Similar News