கதம்பம்

பாலைவனத்தில் பயிர் செய்யலாம்!

Published On 2024-01-05 12:11 GMT   |   Update On 2024-01-05 12:11 GMT
  • பாலைவனமும் சந்திக்கும் பகுதிகளில் பசுமைக்குடில்களை நிறுவி விவசாயம் செய்கிறார்கள்.
  • பாலைவனங்களில் இப்படி பழங்கள், காய்கறிகள் எல்லாம் விளைவிக்கப்படுகின்றன.

உலகில் ஏராளமாக இருக்கும் வீணான வளங்கள் என பாலைவனத்தையும், கடல்நீரையும் சொல்லலாம்.

பாலைவனங்களில் ஏராளமான இடம் இருக்கிறது. கடலில் ஏராளமான நீர் இருக்கிறது. கடல்நீரை வைத்து பாலைவனத்தில் விவசாயம் செய்யமுடிந்தால் எப்படி இருக்கும்?

இது எப்படி சாத்தியம் என டென்சன் ஆகவேண்டாம். இருக்கும் தொழில்நுட்பமே போதும் என்கிறது Seawater greenhouse கம்பனி. இவர்கள் ஏற்கனவே ஜோர்டான், சோமாலியா, ஆஸ்திரேலியா மாதிரி கடலும், பாலைவனமும் சந்திக்கும் பகுதிகளில் பசுமைக்குடில்களை நிறுவி விவசாயம் செய்கிறார்கள்.

இதன் தொழில்நுட்பம் மிக எளிமையானது. ஆப்பிரிக்காவின் எரித்ரியா பாலைவனத்தில் கடலுக்கு அருகே பசுமைக்குடில் அமைத்தார்கள். அங்கே ஏராளமான சூரியவெளிச்சம் இருந்தது. சோலார் பேனல் மூலம் உற்பத்தி ஆன மின்சாரம் கடல்நீரை மோட்டர் மூலம் உறிஞ்சி இழுத்தது.

தாவரங்களுக்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் மிக குறைவான நீர் தான் தேவைப்படும். பசுமைக்குடில்களுக்குள் பைப்புகள் வழியே உப்புநீர் செலுத்தப்பட்டது. அங்கே பாலைவனத்தில் வெப்பம் மூலம் அவை நீராவியாக்கபட்டு பசுமைக்குடில்களுக்குள் நீராவி செலுத்தபட்டது. இது காற்றை ஈரப்பதம் மிகுந்ததாக்கியது. மின்விசிறிகள் சுழன்று வெப்பகாற்று மேலே எழுந்து கூரையில் பட்டு மழையாக மீண்டும் உள்ளேயே விழுந்தது

காற்றில் ஈரப்பதம் இருந்து ஏசி போட்டது போல் இருந்ததால் தாவரங்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு நூற்றில் ஒரு பங்காக குறைந்தது. கடல்நீர் மூலம் எரித்ரியா, சோமாலியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா பாலைவனங்களில் இப்படி பழங்கள், காய்கறிகள் எல்லாம் விளைவிக்கப்படுகின்றன.

ஏக்கருக்கு 100 டன் காய்கறிகளை இப்படி விளைவிக்கமுடியும் என்கிறார்கள். புதிய தொழில்நுட்பம்.. துவக்கும் செலவுகள் கூடுதல்.. நிதி உள்ளிட்ட பல சிக்கல்கள் என எல்லாவற்றையும் தாண்டி விரைவில் இதை பரவலாக்குவோம் என்கிறார்கள்.

விரைவில் உலகெங்கும் பரவி பாலைவனங்களில் இருந்து பழங்களும், காய்கறிகளும் வரட்டும். ஒரு கட்டு கட்டுவோம்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News