கதம்பம்

மேஷ ராசியினர் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Published On 2024-08-31 04:45 GMT   |   Update On 2024-08-31 04:45 GMT
  • மேஷ ராசி அன்பர்கள் சுறுசுறுப்பானவர்கள்.
  • தோஷங்கள் இருந்தால் மட்டுமே மணவாழ்க்கை தோல்வி அடைவதை நாம் காண முடிகிறது.

இவ்வுலகில் பிறந்த மக்கள் அனைவரும் ஓரு குலம் தான். ஆனால் அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஏன் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. உடல் தோற்றம், குணநலன்கள் முதல் பழக்க வழக்கம, வாழ்க்கை முறை வரை அனைத்திலும் ஒவ்வொருவரும் மாறுபட்டே இருப்பார்கள்.

அவரவர் செய்த கர்மவினைகளுக்கு ஏற்பவே பிறவி அமைகிறது. ஒருவர் எந்த ராசியில் பிறந்திருக்கிறாரோ அதற்கேற்பவே அவரது வாழ்க்கை அமைந்திருக்கும்.

மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி ஆராய்வோம்...

மேஷ ராசி அன்பர்கள் சுறுசுறுப்பானவர்கள். இவர்கள் எப்பொழுதும் தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எந்த விஷயத்தையும் பயமில்லாமல் அணுகுவது போன்ற இயற்கையான குணங்களை பெற்றவர்கள்.

சற்று, முன் கோபம் கொண்டவர்கள். கோவம் வந்தால் மூக்கு அல்லது முகம் சிவக்கக் கூடிய நபர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சாகச பயணங்கள் செல்வது விளையாட்டு போன்ற விஷயங்கள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

நம்பிக்கையான நபர்களாகவே இருப்பார்கள் தொழில் மற்றும் நட்பு வட்டத்தில். மந்தமாக செயல்படுபவர்களை கண்டால் இவர்களுக்கு பிடிக்காது. வேகம், சீக்கிரம், அவசரம் இதுபோன்ற வார்த்தைகளை இவர்கள் அதிகம் உபயோகிப்பதை காணலாம்.

காரமான உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடக் கூடியவர்கள். பெரும்பாலும் உஷ்ணமான உடல் அமைப்பை கொண்டவர்கள். நல்ல வலுவான ஆரோக்கியமான உடலமைப்பு பெற்றவர்கள்.

கல்வி மற்றும் தொழில் அமைப்பு:

விஞ்ஞானம், இயந்திரங்களை பழுது பார்க்கக்கூடிய துறை, விமான போக்குவரத்து, கட்டுமானத்துறை, விவசாயம், கனரக பொறியியல் துறை, கணினித்துறை, மருத்துவர், அறுவை சிகிச்சை துறை, ராணுவம், காவல்துறை, விளையாட்டு போன்ற துறைகளில் இவர்களுக்கு கல்வி கற்றாலும் தொழில் அமைந்தாலும் சிறப்பாகவே இருக்கும்

திருமண வாழ்க்கை:

துலா ராசி அல்லது லக்கினத்தை சார்ந்தவர்கள் பொருத்தமான வாழ்க்கை துணையாக அமைவது முடிகிறது. அது மட்டுமில்லாமல் சுக்கிரனின் தன்மை கொண்ட ரிஷபம், மகரம், தனுசு போன்ற ராசிகளும் நன்றாகவே பொருந்தும்.

மேலும் இவர்கள் நட்சத்திர அமைப்பை பொறுத்து தாரா பலன் பார்த்து திருமணம் செய்வது சிறப்பான மணவாழ்க்கை ஏற்படுத்தி தரும். பெரும்பாலும் இவர்களுடைய மண வாழ்க்கை தோல்வி அடைவதில்லை. மோசமான ஜாதக அமைப்புகள், கடுமையான தோஷங்கள் இருந்தால் மட்டுமே மணவாழ்க்கை தோல்வி அடைவதை நாம் காண முடிகிறது.

ஆரோக்கியம்:

உஷ்ண தேகம் அமைப்பை கொண்ட இவர்களுக்கு அது சார்ந்த நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. கொப்புளங்கள், கழிவு உறுப்புகளில் கட்டிகள், மூலம், உடல் சூடால் ஏற்படக்கூடிய தலைவலி மற்றும் குடல் பகுதிகளில் அல்சர் போன்ற நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் இவர்களுக்கு இருக்கும். நரம்பு சார்ந்த பிரச்சனைகளான வெரிகோஸ் வெயின், நரம்பு தளர்வு இது போன்ற விஷயங்கள் நடுத்தர வயதில் ஏற்பட வாய்ப்புள்ளது.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் அடைவதால் மன பலம் சற்று குறைவு, அதனாலே இவர்களுக்கு வியாதிகள் வரும், திருமண வாழ்க்கை அல்லது தொழிலில் ஏற்படும் மனக்குழப்பத்தை சமாளிக்க தெரியாமலேயே பல வியாதிகளை இவர்கள் சமாளிக்கவேண்டிய சூழல் ஏற்படும்.

நோய் தாக்குதலில் இருந்து இவர்கள் மீண்டு வர வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமியை அந்த கோவில் குளத்தில் குளித்துஇவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபடுவது மிகச் சிறப்பு.

இளநீர், கொப்பரைத் தேங்காய், தேங்காய் பால் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது இவர்களுக்கு மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் பெருக செய்ய வேண்டியது:

கிழக்கு வாசல் வீடுகளில் குடி இருக்கலாம், சஷ்டி விரதம் இருப்பது, செவ்வரளி மலர்களால் முருகனை வழிபடுவது, யோக பயிற்சிகளை கற்றுக்கொண்டு செய்வது, பவள மோதிரம் அணிவது, தொழில் தடை மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அஷ்டமி திதியில் சண்முகருக்கு நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபடவும். பணக்கஷ்டம் ஏற்பட்டால் கோசாலைகள் சென்று கோமாதாவிற்கு உணவு கொடுப்பது சிறப்பு.

-ஜோதிடர் ஹரிசுதன்

Tags:    

Similar News