செய்திகள் (Tamil News)

பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடுப்பூசி கட்டாயம்: கேரள அரசு முடிவு

Published On 2016-06-15 10:11 GMT   |   Update On 2016-06-15 10:11 GMT
கேரள மாநிலத்தில் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் போலியோ நோய் இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையான தடுப்பூசிகள் போடப்படாத பகுதிகளில் குழந்தைகளுக்கு வேறு சில நோய்களின் தாக்கம் உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் குழந்தைகளிடையே உள்ள நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு தடுப்பூசியை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன் தொடக்கமாக மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளிடையே தடுப்பூசி திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பான விவரங்களை அரசு சேகரிக்கும். பின்னர் தடுப்பூசி போடாத குழந்தைகளை வகைப்படுத்தி அவர்களுக்கு முறையான தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும்.

இந்த தகவல்களை அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூலம் சேகரிக்க உள்ளது. பள்ளிகளின் தலைவர்கள் இதற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். பள்ளிகள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.

தடுப்பூசி போடுவதற்கு எதிராக சிலர் தீவிரமாக பிரச்சாரம் செய்வதாக வந்த தகவல்களை அடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News