செய்திகள் (Tamil News)

பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிட தடைகோரும் வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

Published On 2016-09-17 02:30 GMT   |   Update On 2016-09-17 02:30 GMT
பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிட தடைகோரும் வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
புதுடெல்லி:

பக்ரீத் பண்டிகையின் போது குர்பானிக்காக ஒட்டகங்களை பலியிடுவது வழக்கம். ஆனால் இவ்வாறு ஒட்டகங்களை பலியிடுவதை தடை செய்ய உத்தரவிடக்கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

மதரீதியான காரணங்களுக்காக மிருகங்களை பலியிடுவதற்கு விலக்கு அளிக்கும் வகையில் விலங்குகள் வதை தடை சட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ள 28-வது பிரிவை நீக்கவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரணை தொடங்கியதுமே இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

அப்போது பதிலளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், தாங்கள் இந்த மனுவை வாபஸ் பெறுவதாகவும், ஆனால் இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டை அணுகுவதற்கு அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டெல்லி ஐகோர்ட்டை அணுக அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

Similar News