செய்திகள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு - ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்
கர்நாடக சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 6 மணி நிலவரப்படி சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவானது. #KarnatakaElection2018 #70pcvoterturnout
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடியும், குறைபாடும் காணப்பட்டதாக அரசியில் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஹெப்பல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரண்டாம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு பின்னர் கிடைக்கும் ஒப்புகை சீட்டில் வாக்களித்த வேட்பாளருக்கு பதில் வேறு பெயர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதேபோல், மாநிலம் முழுவதிலும் 164 வாக்கு இயந்திரங்களிலும், 157 மத்திய கட்டுப்பாட்டு கணினிகளிலும் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கர்நாடக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71.4 சதவீதம் வாக்குகள் பதிவானது நினைவிருக்கலாம்.
இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaElection2018 #70pcvoterturnout