செய்திகள்

ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கோவா, மணிப்பூரில் கவர்னரை சந்தித்து காங். கோரிக்கை

Published On 2018-05-18 09:13 GMT   |   Update On 2018-05-18 09:13 GMT
கர்நாடகாவில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்ததை மேற்கோள்காட்டி, கோவா மற்றும் மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளனர். #congress #bjp
பனாஜி:

கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதால் அக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்ததாக விளக்கம் கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் கோவா மற்றும் மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரை சந்திக்க திட்டமிட்டனர்.

கோவாவில் இன்று மதியம் காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில், கவர்னர் மிருதுலா சின்ஹாவை ராஜ்பவனில் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்குமாறு கடிதம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து சந்திரகாந்த் கவ்லேகர் கூறுகையில், 'கர்நாடகா தேர்தலில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியையே ஆட்சி அமைக்குமாறு அம்மாநில கவர்னர் அழைத்துள்ளார். அதுபோல கோவா கவர்னரும், கோவாவில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக ஆளுனர் முடிவெடுக்க 7 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதே போல மணிப்பூரிலும் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. #congress #bjp 
Tags:    

Similar News