செய்திகள் (Tamil News)

கேரளாவில் காதல் திருமணம் செய்த வாலிபர் கவுரவ கொலை

Published On 2018-05-29 04:38 GMT   |   Update On 2018-05-29 04:38 GMT
கேரளாவில் காதல் கலப்பு திருமணம் செய்த வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்ணின் சகோதரர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.#HonourKilling #LoveMarriage
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சூரியகவளா பகுதியை சேர்ந்தவர் கெவின் (வயது 23). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் நினு (20). கொல்லம் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கெவினும், நினுவும் காதலித்து வந்தனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்தனர். பின்னர் சூரியகவளாவில் குடும்பம் நடத்தினர். புதுமணத்தம்பதியினர் அனிஷ் என்பவருடன் நேற்று வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது நினுவின் அண்ணன் உள்பட 12 பேர் வீட்டுக்குள் திபுதிபுவென புகுந்தனர்.

கெவின், அனிஷ் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களை ஒரு வாகனத்தில் கடத்திச்சென்றனர். இதில் அனிஷ் மட்டும் படுகாயத்துடன் திரும்பி வந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனையடுத்து நினு காந்திநகர் போலீசில் தனது கணவர் கெவினை அண்ணன் சானுசாக்கோ மற்றும் அவரது கும்பல் கடத்திச்சென்று விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு தரவேண்டும் என்று புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளை மற்றும் பெண்ணின் அண்ணனையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் கெவின் பிணமாக மிதப்பதாக புனலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வாலிபர் கெவின் கலப்பு திருமணம் செய்ததால் கவுரவ கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக நினுவின் அண்ணன் சானுசாக்கோ, அவரது நண்பர்கள் ரியாஷ், நியாஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் தனது கணவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து நினு கதறி துடித்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

இது குறித்து புதுப்பெண் நினு கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் கடத்தப்பட்டது குறித்து காந்திநகர் போலீசில் புகார் செய்தபோது ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதாக குற்றம்சாட்டினார்.



போலீசாரின் செயலை கண்டித்து காந்திநகர் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசாரின் மெத்தனபோக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில மனிதஉரிமை ஆணையம் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி டி.ஜி.பி. லோக்நாத் பெகரா, காந்திநகர் இன்ஸ்பெக்டர் சிபு, சப்-இன்ஸ்பெக்டர் சன்னிமோன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது ரபீக் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த கவுரவ கொலையை கண்டித்து இன்று கோட்டயம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். #HonourKilling #LoveMarriage
Tags:    

Similar News