செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்: பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் - தெலுங்குதேசம் கட்சி

Published On 2018-07-25 23:22 GMT   |   Update On 2018-07-25 23:22 GMT
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர். #TDP #PrivilegeMotion #Modi
புதுடெல்லி:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் மீது கடந்த 20-ந்தேதி நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என 14-வது நிதிக்குழு பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.

ஆனால் அப்படி ஒரு பரிந்துரையை 14-வது நிதிக்குழு வெளியிடவில்லை என தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருக்கும் தனது கட்சி எம்.பி.க்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதை அவர்களிடம் கூறிய சந்திரபாபு நாயுடு, இதன் மூலம் பிரதமரும், மத்திய மந்திரிகளும் மக்களவையை தவறாக வழிநடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

எனவே பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பரிசீலிக்குமாறு தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க அந்த கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர்.

முன்னதாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #TDP #PrivilegeMotion #Modi 
Tags:    

Similar News