செய்திகள் (Tamil News)

சுதந்திர தினவிழாவில் தாக்குதலுக்கு சதி - ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் அதிரடி கைது

Published On 2018-08-13 10:07 GMT   |   Update On 2018-08-13 10:07 GMT
சுதந்திர தினவிழாவில் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #IndependenceDay

புதுடெல்லி:

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியும், மாநிலங்களில் முதல்-அமைச்சர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளனர்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர் குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக கடந்த மாதம் உளவுத்துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத எதிர்ப்புப்படையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள்.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எந்தெந்த நகரங்களில் அதிகமாக உள்ளது என்பதை பட்டியலிட்டு இந்த வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று ஐதராபாத்தில் தாக்குதல் நடத்த ஐ.ஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஐதராபாத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டுக்குள் இருந்த அப்துல்பாசித், முகம்மது அப்துல் குவாதீர் என்ற 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். தீவிர விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.

உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது உடமைகளை போலீசார் ஆய்வு செய்த போது, குண்டு வெடிப்புக்கு அவர்கள் சதிதிட்டம் தீட்டி இருந்தது தெரிந்தது.

இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அவர்கள் இருவரும் ஓசையின்றி செயல்பட்டு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் பயன்படுத்திய கணிணி கைப்பற்றப்பட்டது. அந்த கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள் மூலம் இந்தியாவில் யார்- யாரெல்லாம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் தொடர்பு வைத்திருந்தனர் என்பது தெரிய வரும்.

இதற்கிடையே மும்பை நகரிலும் 2 பேர் பிடிபட்டனர். புனே நகரிலும் ஒரு பயங்கரவாதி பிடிபட்டான். இவர்களும் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இதனால் சுதந்திர தினத் தன்று குண்டு வெடிப்புக்கு திட்டமிட்டு கைதானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீரில் கடந்த வாரம் அல்கொய்தா பயங்கரவாதி ஒருவன் பிடிபட்டான். அவனிடம் இருந்து 8 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த 8 குண்டுகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News