செய்திகள் (Tamil News)

ஆண்களின் திருமண வயதையும் 18 ஆக குறைக்க வேண்டும் - சட்ட கமிஷன் சிபாரிசு

Published On 2018-08-31 23:51 GMT   |   Update On 2018-08-31 23:51 GMT
ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
புதுடெல்லி:

நமது நாட்டில் இப்போது ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18.

இந்த நிலையில், குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மத்திய சட்ட கமிஷன் சில சிபாரிசுகளை செய்து உள்ளது. அந்த வகையில் ஆண்களின் திருமண வயதையும், பெண்கள் திருமண வயதைப் போன்று 18 ஆக குறைக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “பெரும்பான்மைக்கான உலகளாவிய வயது 18 என அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை அந்த வயதில் வழங்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கிற போது, அவர்களுக்கு தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறனும் அந்த வயதில் வந்து விடுகிறது என்று கருத வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.

திருமணத்துக்கு பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது என மாறுபட்ட வயது வரையறை இருப்பது, மனைவியானவள் கணவனை விட இளமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான பங்களிப்புக்குத்தான் வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும், குடும்பத்தின் பெண்களின் பங்கை அங்கீகரிப்பது அவசியம்; அவர்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து தந்து இருக்கிறார்களா என பார்க்காமல், அவர்கள் விவாகரத்து செய்திருந்தாலும், திருமணத்துக்கு பின் வாங்கிய சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் எனவும் சட்ட கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது.
Tags:    

Similar News