செய்திகள் (Tamil News)

கூடுதல் தொகுதிக்காக யாரிடமும் நாங்கள் கையேந்த மாட்டோம் - மாயாவதி

Published On 2018-10-10 06:57 GMT   |   Update On 2018-10-10 06:57 GMT
கூடுதல் தொகுதி வேண்டும் என்பதற்காக யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். #Mayawati #Parliamentelection #BJP

புதுடெல்லி:

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட முயற்சி நடந்து வருகிறது.

இதில், நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும் இடம்பெற செய்ய முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தலிலும் மாயாவதி கட்சியை காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களிலும் மாயாவதி கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.

எனவே, இந்த மாநிலங்களில் அவருடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. ஆனால், மாயாவதி அதிக தொகுதி கேட்டதால் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை.


இதன் காரணமாக தனித்து போட்டியிடப் போவதாக மாயாவதி அறிவித்து விட்டார். இதனால் பாராளுமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராமின் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மாயாவதி கூட்டணி தொடர்பாக கருத்துக்களையும் வெளியிட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவு இருக்கிறது. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், சிறுபான்மையினர், உயர் ஜாதியினர் என பலரும் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கிறார்கள்.

எங்களுக்கு உள்ள செல்வாக்கின் அடிப்படையில் தொகுதிகளை தர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எங்களுக்கும் தன்மானம் உண்டு. கூடுதல் தொகுதி வேண்டும் என்பதற்காக யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டோம். அதற்கு பதிலாக தனித்து போட்டியிடுவோம்.இதற்கான துணிச்சல் எங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.

காங்கிரஸ்- பாரதிய ஜனதா இரு கட்சிகள் ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டோர், சிறு பான்மையினருக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீக்கவே நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரை அவர்கள் உயர் ஜாதியினருக்கு மட்டும் தான் ஆட்சி நடத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #Mayawati #Parliamentelection #BJP

Tags:    

Similar News