செய்திகள்

3 மாநில தேர்தலில் வெற்றி பெறுவோம் - அமித் ஷா நம்பிக்கை

Published On 2018-11-26 07:21 GMT   |   Update On 2018-11-26 07:21 GMT
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah #BJP

புதுடெல்லி:

அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகில மாநிலங்களில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். அங்கு ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு கடும் சவால் நிலவுவதாக சொல்வது தவறானது.

ஆனால் நிலைமை அப்படியல்ல. தேர்தல் முடிவு டிசம்பர் 11-ந்தேதி வரும்போது 3 மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்போம். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்து வலுவாகும்.

மக்களின் அமோக ஆதரவுடன் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார்.

ஒரு மாநிலத்தில் அரசு நடந்து கொண்டிருந்தால் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பை மட்டும் பத்திரிகைகள் வெளிப்படுத்தி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன. குஜராத் மாநிலத்திலேயே இதை பார்த்திருப்பீர்கள்.

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாங்கள் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம். ஏராளமான வளர்ச்சி திட்டங்களை அங்கு நிறைவேற்றி இருக்கிறோம். 129 நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

நாங்கள் செய்துள்ள வளர்ச்சி திட்டங்களே எங்களுக்கு மக்களிடம் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அரசுக்கு எதிர்ப்பு இருப்பதாக இப்போது தான் சிலர் பேசுகிறார்கள். இதேபோலத்தான் குஜராத் தேர்தலிலும் சொன்னார்கள். ஆனால் அங்கு நாங்கள் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றோம். அதற்கு நாங்கள் செய்த திட்டங்கள் தான் காரணம். அதேபோல இந்த மாநிலங்களிலும் எங்களுடைய திட்டங்கள் வெற்றியை தேடித்தரும்.

 


மாநில தேர்தல் முடிவின் தாக்கம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்று சொல்வது சரியான வாதம் அல்ல. மாநில தேர்தல் என்பது அங்குள்ள சூழ்நிலைகளை பொறுத்து, அங்குள்ள பிரச்சினைகளை மையமாக வைத்து நடப்பதாகும்.

எனவே அதன் தாக்கக்தை பாராளுமன்றத்தில் எதிர் பார்க்க முடியாது. எங்கள் கட்சியை பொறுத்தவரை கூட்டு அரசியல் முறையில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் செய்த திட்டங்கள், எதிர்கால பணிகள் மூலம் 2019 தேர்தலிலும் சிறப்பான வெற்றியை பெறுவோம். மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து பல மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். உத்தரபிரதேசம், மராட்டியம், அரியானா என பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறோம்.

இப்போது நடக்கும் 5 மாநில தேர்தல்களும் எங்களுக்கு முக்கியமானது தான். இதிலும் சிறப்பான வெற்றி கிடைக்கும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. பெரிய அளவிலான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எங்களது உறுதியான எண்ணம் நோக்கம் ஆகும். இதில் வேறு எந்த சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை.

அதே நேரத்தில் இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஜனவரி மாதம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. நிச்சயம் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை காத்திருப்போம்.

இது 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு. ஆனால் காங்கிசார் இந்த வழக்கை மீண்டும் நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கபில்சிபில் கூறியிருக்கிறார். அவர்கள் தான் வழக்கை தள்ளிப்போட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

 


இந்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது. சிவசேனாவை பொறுத்தவரை அது தனி கட்சி. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். இந்த வி‌ஷயத்தில் எங்களுக்குள் மோதல் போக்கு எதுவும் இல்லை.

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 22 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் 21 மாநிலங்களில் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் கொண்டுள்ள இந்துத்வா கொள்கைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்.

நாங்கள் தேர்தல் காலத்தில் மட்டும் இந்த கொள்கைகளை பின்பற்றுபவர்கள் அல்ல. காங்கிரஸ் முத்த தலைவர்கள் கமல்நாத், ஜி.பி. ஜோஷி போன்றவர்கள் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் கருத்துக்களை கூறி அரசியல் ஆதாயத்தை பெற முயற்சிக்கிறார்கள்.

தற்போது காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலிவான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி, உமாபாரதி போன்றவர்கள் பற்றி மோசமான விமர்சனங்களை செய்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய வாரிசு அரசியல், ஜாதி அரசியலை தடுப்பதால் எங்கள் மீது ஆத்திரம் அடைந்து இது போன்று நடந்து கொள்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர்கள் மோடியின் தாயாரை பற்றி விமர்சித்தது மிகவும் தவறானது. கடுமையாக கண்டிக்கக் கூடியது.

நாங்கள் ஒருபோதும் ஜாதி, மத அரசியலை முன்வைப்பது இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் தான் செயலாற்றி வருகிறோம். எனவே அனைத்து தரப்பு மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

தெலுங்கானா மாநிலத்தில் நாங்கள் சட்டமன்ற தேர்தலில் வலுவாக போட்டியிடுகிறோம். இதனால் தெலுங்கானா அரசை விமர்சிக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் என வரும்போது, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி எங்களை ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்க்க வேண்டும்.

மாநில தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் வெவ்வேறு சூழ்நிலைகளை கொண்டது.

ரபேல் விமான ஊழல் தொடர்பாக ராகுல்காந்தி தொடர்ந்து அப்பட்டமான பொய் தகவல்களை கூறி வருகிறார். இதனால் பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய நாங்கள் சீலிட்ட கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறோம்.

எங்களை எதிர்ப்பதற்கு எந்த பிரச்சினையும் கையில் இல்லாததால் இதையே திரும்ப, திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்.

சி.பி.ஐ. மற்றும் ரிசர்வ் வங்கி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி போன்றவர்கள் குற்றம்சாட்டுவது தவறு. சி.பி.ஐ.யில் 2 அதிகாரிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த விவகாரம் தற்போது மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி விவகாரத்தை பொறுத்தவரை ரிசர்வ் வங்கி சட்ட விதிகள் படி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதற்காக மத்திய அரசு தலையிட்டதாக கூறுவது தவறு. தன்னிச்சையாக செயல்படும் அவற்றின் மீது மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.

காஷ்மீர் மாநில சட்டசபையை கலைத்தது கவர்னர் எடுத்த முடிவு. அங்கு குதிரை பேரம் நடந்ததால் கவர்னர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் அவர்களுக்கு யார் ஆதரவு கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை கூட குறிப்பிடவில்லை. அதற்கான கடிதமும் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு அமித் ஷா கூறினார். #AmitShah #BJP

Tags:    

Similar News