காங்கிரஸ் ஆட்சியில் மாதந்தோறும் 9 ஆயிரம் டெலிபோன்கள் இடைமறித்து சோதனை - தகவல் அறியும் சட்டத்தில் தகவல்
புதுடெல்லி:
அனைத்து கம்ப்யூட்டர்களையும் இடைமறித்து சோதனை நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தனிமனிதனி சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம்சாட்டினர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் இந்த சட்டம் தற்போதைய ஆட்சியாளர்களால் புதிதாக கொண்டு வரப்படவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்தது.
அப்போது தி.மு.க.வை சேர்ந்த அ.ராசா தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் சிவ் ராஜ் பாட்டீல் உள்துறை மந்திரியாக இருந்தார். இது 2009-ம் ஆண்டு சட்டமானது. அப்போது அ.ராசா தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரியாகவும், ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாகவும் இருந்தனர்.
குற்றங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் மிரட்டல்களை கண்டுபிடிக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசு தெரிவித்தது. அப்போது மாதந்தோறும் 9 ஆயிரம் டெலிபோன்கள் மற்றும் 300 இ-மெயில்கள் டேப் செய்யப்பட்டும், இடைமறித்தும் சோதனை நடத்தப்பட்டது.
நாள்தோறும் 300 டெலிபோன்கள் மற்றும் 20 இ-மெயில்கள் இடைமறித்து டேப் செய்யப்பட்டன. இந்த தகவல் கடந்த 2013-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த புரோசென்ஜித் என்பவரால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்காக வழங்கப்பட்ட பதிலில் உள்ளது.
எனவே இந்த சட்டத்தை நாங்கள் (பா.ஜனதா அரசு) கொண்டுவரவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்து நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது அதில் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. தற்போதைய பா.ஜனதா அரசு கம்ப்யூட்டர்களை இடைமறித்து தகவல்களை அறிய 10 நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. #Congress