செய்திகள்

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது - பிரதமர் மோடி

Published On 2018-12-27 13:32 GMT   |   Update On 2018-12-27 13:32 GMT
விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை தவறான முறையில் காங்கிரஸ் வழி நடத்துகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தரம்சாலா:

இமாச்சல பிரதேசத்தில் ஜெய் ராம் தாகூர் தலைமையிலான பா.ஜனதா அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதாவை ஆட்சிலிருந்து நீக்கிய காங்கிரஸ் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘நாடுமுழுதும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல்  பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம்’’ என்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.

‘‘2009-ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ரூ. 60,000 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால் ரூ.6 லட்சம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதியளித்து இருந்தது. அப்போது காங்கிரஸ் கொண்டு வந்த விவசாயக் கடன் தள்ளுபடியில் விவசாயிகள் அல்லாத லட்சக்கணக்கானோர் பலன் அடைந்தனர் என்பது சிஏஜி அறிக்கையில் தெரியவந்தது. பஞ்சாப், அரியானா மாநில தேர்தலுக்கு முன்னதாகவும் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஒன்றும் கிடைக்காத நிலையில், கர்நாடகாவில் 800 விவசாயிகளுக்கு அடையாள ரொக்கம் மட்டும் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியின் மூலம் மக்களை முட்டாளாக்கி வருகிறது’’ என குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி.
Tags:    

Similar News