செய்திகள்

சுனாமி தாக்கிய அந்தமானில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் - மோடி அடிக்கல் நாட்டினார்

Published On 2018-12-30 09:40 GMT   |   Update On 2018-12-30 10:24 GMT
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி கார் நிக்கோபார் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.50 கோடி செலவில் தடுப்பு சுவர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். #facilitiesforAndaman #PMModi
கார் நிக்கோபார்:

அந்தமான் நிக்கோபார் தீவுகளை கடந்த 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கார் நிக்கோபார் நகரில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், இங்குள்ள பி.ஜே.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார் நிக்கோபார் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பு சுவர் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய மோடி, அந்தமானில் இன்னும் கூட்டுக் குடும்பமுறை கடைபிடிக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இங்குள்ள மக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என உறுதியளித்தார்.



இங்கு வாழும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பிள்ளைகளின் கல்வி, முதியவர்களுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் விவசாய மக்களின் தேவைகளை இந்த அரசு உறுதிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

அந்தமானில் வாழும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் தேங்காய் நாருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 7 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாக தனது தலைமையிலான அரசு உயர்த்தியுள்ளதையும் மோடி சுட்டிக்காட்டினார்.

இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையிலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறும் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க 300 கிலோவாட்ஸ் கொள்திறன் கொண்ட உற்பத்தி நிலையம் இங்கு விரைவில் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.  #facilitiesforAndaman #PMModi
Tags:    

Similar News