செய்திகள்

திருப்பதி அருகே நக்சலைட் என கூறி தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

Published On 2018-12-31 06:34 GMT   |   Update On 2018-12-31 06:34 GMT
திருப்பதி அருகே நக்சலைட் என கூறி தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி அடுத்த பீலேரு பகுதியை சேர்ந்தவர் போய கொண்டப்பா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பாபு (45), ரவி (42). சகோதரர்களான இருவரும் பீலேரு பகுதியில் சிமெண்டு மற்றும் ஸ்டீல் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த 27-ந் தேதி பாபு, ரவி ஆகியோருக்கு போய கொண்டப்பா செல்போனில் தொடர்பு கொண்டு நான் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவன். எனவே எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லை என்றால் உங்களுடைய வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து குடும்பத்துடன் காலி செய்து விடுவேன், இது குறித்து போலீசுக்கு சொல்ல கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.

மேலும் ரூ.10 லட்சத்தை பையில் வைத்து பீலேரு-சித்தூர் ரெயில்வே கேட் அருகே வைத்துவிட்டு சென்று விடவேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து பாபு, ரவி இருவரும் பீலேரு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சோமசேகரிடம் புகார் அளித்தனர்.

போலீசாரின் அறிவுரையின் பேரில் பையில் சிறிதளவு பணத்தை வைத்து நேற்று ரெயில்வே கேட் அருகே வைத்துள்ளனர். அப்போது பணத்தை எடுக்க வந்த போய கொண்டப்பாவை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கிரிக்கெட் போட்டியின் போது பணம் வைத்து பெட் கட்டியதால் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் கடன் தொல்லை காரணமாக பணம் கேட்டு மிரட்டியதாகவும், தான் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவன் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து போய கொண்டப்பாவை பீலேரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News