செய்திகள்

பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான்: பா.ஜனதா மாநிலத் தலைவர்

Published On 2019-01-06 03:25 GMT   |   Update On 2019-01-06 03:25 GMT
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் தெரிவித்துள்ளார். #Mamata
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ், மேற்கொண்டு கூறுகையில் ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது. நாட்டின் முதல் பெங்காலி பிரதமர் என்ற பெருமையை பெறவும் அவருக்கு வாய்ப்புள்ளது.

அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்பதால்தான் சிறப்பாக பணியாற்றுகிறார். பெங்காலி ஒருவர் பிரதமாக முடியும் என்றால் அந்த பட்டியலில் மம்தா பானர்ஜிதான் முதலிடத்தில் இருப்பார்.

மம்தாவின் வெற்றியை பொருத்தே மேற்கு வங்கத்தின் தலைவிதி உள்ளது. ஜோதி பாசுவை முதல் பெங்காலி பிரதமராக எங்களால் ஆக்க முடியவில்லை. ஏனென்றால், அவரின் கட்சி அவரை பிரதமராக விடவில்லை. முதல் பெங்காலி ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். அதனால் இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான நேரம்’’ என்றார்.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பா.ஜனதா கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் மம்தாவை பிரதமராக ஆக்குவது தொடர்பாக பா.ஜனதா தலைவர் பேசியிருப்பது அக்கட்சியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News