செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் பா.ஜ.க. தலைவர் குற்றவாளியாக சேர்ப்பு

Published On 2019-02-10 10:32 GMT   |   Update On 2019-02-10 10:32 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதாரவாளராக இருந்து பா.ஜ.க.வுக்கு தாவிய முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். #MukulRoybooked #TMCMLAkilling #SatyajitBiswas
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் நடந்த சரஸ்வதி பூஜையில் நேற்று பங்கேற்றார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதாரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #MukulRoybooked #TMCMLAkilling #SatyajitBiswas 
Tags:    

Similar News